பவுலை போல ஊழியம் நிறைவேற்றுங்கள்👍
கிறிஸ்து இயேசுவில் பிரியமான எனதருமை சகோதர சகோதரிகளே,இயேசுவின் இனிய நாமத்தில் உங்களை இந்த பதிவின் வாயிலாக சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய தினத்தில் இந்த பதிவில் பரமபிதா நம்மை அழைத்த விதத்தையும், அந்த அழைப்பின் மேன்மையும் குறித்தான சில காரியங்களை உங்களுடன் பகிர ஆசைபடுகிறேன்,அதற்கு உதாரணமாக ஒரு தேவ மனிதனின் ஊழிய பாதையை உங்கள் முன் எடுத்துகாட்ட விரும்புகிறேன்,தலைப்பில் நீங்கள் பார்ததுபோல அந்த மனிதன் அப்போஸ்தலனாகிய பவுல் தான்.
பவுலை பற்றி பல காரியங்கள் நமக்கு தெரியும் உதாரணமாக புதிய ஏற்பாட்டின் பெரும்பாலான நிருபங்களை எழுதியவர்,வல்லமையான ஊழியக்காரன்,வைராக்கியம் நிறைந்தவர் என்று என்னை காட்டிலும் உங்களுக்கு இன்னும் அதிகமாகவே தெரிந்திருக்க கூடும் என்று கர்த்தருக்குள் விசுவாசித்த இந்த பதிவை தொடருகிறேன்.பவுலின் இந்த வார்த்தைகளை கவனித்து பாருங்கள்:
' நல்ல போராட்டத்தைப் போராடினேன், ஓட்டத்தை முடித்தேன், விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்'.
2 தீமோத்தேயு 4:6
கிறிஸ்தவ வாழ்க்கை போராட்டம் நிறைந்த வாழ்க்கை என்பதற்கும்,அந்த வாழ்க்கையை கிறிஸ்து கற்பித்த படி வாழ்பவனுக்கு உலகத்தில் உபத்திரவம் உண்டு என்பதற்கும் இந்த வார்த்தைகள் நல்ல சான்று,சரி அதென்ன நல்ல போராட்டம் என்று பார்த்தால் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நமக்கு ஆவிக்குரிய வகையிலும் சரி,மாம்ச வகையிலும் சரி ,பலவித போராட்டங்கள் உண்டு ;அதில் வீழ்ச்சியடைந்து கிறிஸ்துவை விட்டு பின் மாற்றம் அடைந்து செல்லாமல் இருப்பதே 'நல்ல போராட்டம்' .
' முன்னே நான் தூஷிக்கிறவனும், துன்பப்படுத்துகிறவனும், கொடுமை செய்கிறவனுமாயிருந்தேன்; அப்படியிருந்தும், நான் அறியாமல் அவிசுவாசத்தினாலே அப்படிச்செய்தபடியினால் இரக்கம்பெற்றேன். '
1 தீமோத்தேயு 1:13
இந்த வசனத்தில் தன் முன்நிலைமையையும்,பின் தேவன் தன்னை அழைத்த விதத்தையும் குறிப்பிடும் பவுலின் தாழ்மையை இங்கு காணலாம்,பிரதான அப்போஸ்தல அழைப்பை பெற்றிருந்தும் மேன்மை பாராட்ட எனக்கு இடமில்லை என்று கொரிந்து மக்களுக்கு எழுதிய நிருபத்தில் குறிப்பிடுகிறார்,மேலும் பரலோகம் தமக்கு ஏற்ற சன்மானம் வைத்திருப்பதை நன்கு உணர்ந்த ஊழியக்காரன் தான் பவுல்...எனவேதான் உலகம் தனக்கு தரும் செல்வங்களை குப்பை என்றார்,பரம அழைப்பின் பந்தயத்திற்கு வேறு பிரிக்கப்பட்ட நாம் மேலானவைகளை நாட வேண்டும் என்று அறிவுரை கூறி நம்மை உற்சாகப்படுத்தியவரும் பவுல் தான்,
நம்மில் எத்தனை பேரால் பவுலை போன்றதொரு ஓட்டத்தை ஓடி முடித்தேன் என்றும் நிச்சயத்தோடு கூற முடியும் ; 'மரணமே உன் கூர் எங்கே;பாதாளமே உன் ஜெயம் எங்கே?' என்று கேட்கும் துணிவும்,சுவிசேஷ பாரமும் நம்மில் எத்தனை பேரிடம் உண்டு,சற்று சிந்திப்போம் ,பவுலை போன்றதொரு ஓட்டத்தை ஓட பெலன் வேண்டியும்,ஊழியத்தின் பாதையில் தேவன் அந்த விதமாய் நம்மை பயன்படுத்த வேண்டியும் பரம தகப்பன் இயேசப்பாவிடம் இன்றே நம்மை ஒப்புக்கொடுக்க முன் வருவோம்,ஆவியானர் நம்மை நடத்துவாராக-
ஆமென்! அல்லேலூயா!😇
Comments
Post a Comment